Monday, September 3, 2007

கூடைக்குள் தேசம் 06

51.
ஆயிரத்துக்கு முயன்று நூறு
அதிகமாக கிடைத்து விட்டது.
இப்போ இலக்கு இரண்டாயிரம்.

52.
நேற்று எங்களுருக்கு
புதிய அதிகாரி வந்தார்
பழையவரைப் போலவே!

53
கத்தியெடுத்தது காற்று
தீட்டி விட்டவன் சூரியன்
இலையுதிர்காலம்.

54.
பாலில் முகம் பார்த்து
பதற்ற முறும் வானம்
பௌர்ணமியா? அமாவாசையா?

55
வீடென்று நான் சுமந்தது
சவப்பெட்டி தானோ!
நந்தையின் கடலை ஞானம்.

56
எஞ்சியிருந்த ஆற்றையும்
விழுங்கி ஆசையை தீர்த்தது கடல்
சூரிய யுத்த வேளை.

57
கருங்கற்களிலும்
புன்னகைகள்
காக்கையின் எச்சங்கள்

58
கடலில் ஓய்வெடுக்கும்
நதியைப்பார்த்து மூச்சு விடும்-
கரையில் வளைந்தோடும் ரோடு.

59
ஆழ நீர்த் தொட்டிக்குள்
அமிழ்த்தியும் விழித்திடா விழிகள்
உறங்கி விட்ட மீன்கள்!

60
மண்ணை மூடி மறைக்கும்
தேயிலைச் செடிகளின் கீழ்த்தடயங்கள்
உனது பாதச்சுவடுகள்.

No comments: