Tuesday, August 28, 2007

கூடைக்குள் தேசம்

31
படுக்கையறையுடன் வீடு
இனியாருக்கும் பயமில்லை
சவப்பெட்டி.

32
தீயை முத்தமிட்டும்
எரியா பஞ்சுப்பொதிகள்
வெண்முகில்கள்.

33
ம்..கையை எடுங்கள்
எத்தனை கண்கள் பார்க்கின்றன
நட்சத்திரங்கள்.

34.
பெய்யெனச் சொல்லியும் மழை
பெய்யவில்லை- கற்பில்லைத்தான்
காடுகளுக்கு.

35
முதுகில் கனக்கும் அழுக்கை
அளந்து கடந்த தூரத்தை கணக்கிடும்
நதி.

36.
நிலவின் மரணத்தில்
துக்க அனு~;டானம்
அமாவாசை.

37.
பகல் முழுவதும்
நிம்மதியான உறக்கம்
தலையணை.

38.
எண்ணிக் கொள்ளுங்கள்
எத்தனை சீதைகள்?
விட்டில் இராச்சியத்தில்.

39.
மாடியிலிருந்து ஏசிய துரை
தொழிலாளியின் கால்களில் வீழ்ந்தான்
நிழலின் ஒத்திகை.

40.
தீக்கு திசை மந்திரம்
கற்றுக் கொடுத்தது காற்று
காடு எப்போ பஸ்மம்.

Saturday, August 25, 2007

கூடைக்குள் தேசம் 05

21
போர்வையை விலக்கி
மெல்லென விழித்தன மலைகள்
பனி மூட்டம்!

22
இரத்தம் வடிய தோலைக்
கிழித்து இப்படியா பார்ப்பது?
விடியல்!

23
அடைப்பட்ட கைதிகளுக்கு
அவ்வப்போது மரணதண்டனை
தீக்குச்சிகள்.

24
ஆழ் கடலுக்குள்ளும் திருடர்கள்
மூடியிருக்குது பெட்டகம்.
முத்துச் சிப்பி.

25
பஸ் விபத்தில் மிஞ்சியது
ஒருயிர் மட்டும் தான்!
புத்தகம்.

26
நேர்த்தியாக தெரிகின்றது
உடைந்த சமுதாய விம்பம்
எழுத்தாளன்.

27
வயிற்றை மிகையாக நிரப்பி
வாந்தி எடுத்தது துப்பாக்கி
சமாதானம் பட்டினி

28
வேலை முடித்தவன் வீடு திறந்தான்
இனி விடியுமட்டும்
பூட்டுக்குள் சாவி.

29
பெண்ணைக் காவல் வைத்துவிட்டு
விடியுமட்டும் குளியலா?
சூரியன்.

30
போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே புகையிரதம்!
லயன்கள்.

Friday, August 24, 2007

கூடைக்குள் தேசம்-04

16
காற்றுக்குள் தான் எத்தனை
எத்தனை நந்தவன அஸ்திவாரங்கள்
மகரந்தம்.

17
நான் பார்த்து விபத்தானது
முகமெல்லாம் இரத்தம்
நாணம்.

18
எட்ட இருக்கு மட்டும்
இங்கொன்றும் எரியாது
சூரியனே.

19
சேவல் கூவியதும்
திடுக்கிட்டு எழுந்தான்
வோட்டுக்களிடையே உறங்கியவன்.

20
எத்தனை மரணங்களின்
கல்லறைகள்
மருந்து வில்லைகள்.

Monday, August 20, 2007

கூடைக்குள் தேசம்-03

11
மணமகளின் அங்கக்குறை
நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதே!
தங்கம்.

12
எத்தனை பரம்பரைகளை
நொடிக்குள் அகற்றிவிட்டோம்!
முட்டை.

13
கனத்த இருளுள் கறுத்த
பாடகனின் சங்கீதமா?
விட்டில் சப்தம்.

14
வாசனைப்புகை வண்ணமலர்
போசனை உணவு
கண்மூடிய விக்கிரம்!

15
துயர்களின் பருமனை காண
கண்கள் கிடைத்து விட்டன
எங்கே மலையக மக்கள்?

கூடைக்குள் தேசம்-02

06
விடிந்து விட்டால்
அணைந்து விட்டதாக அர்த்தமா
நட்சத்திரங்கள்.

07
பாலைவனத்துக்கு மேலே
மழை முகில்கள்
எம்மவர் கண்ணீர்

08
புதியவன் நுழைய
கலவரம் தொடங்கிவிட்டது
நீர்ப்பரப்பில் நீர்த்துளி!

09
பசுமையுடன் இளமை முடிய
காவியுடன் வெளியேற்றம்
இலைகள்!

10
யுத்த தர்மப்படி அறைகூவி
போர் நடந்து முடிந்தது-
நுளம்பு.

கூடைக்குள் தேசம் -01

01
கூடையைக் கனக்க
கனக்கச் சுமந்து சென்றார்கள்
உள்ளே இந்த தேசம்.

02
காரிருள் சப்தத்தில்
காதுகளிரண்டையும் வைத்தேன்
எத்தனை கவிதைகள்!

03
சங்கக் கூடுகள் அப்படியே
இருக்க – ஆவிகள் இடம் மாறின
இன்னும் சங்கச் சண்டை.

04
ஆயுள் முழுவதும் அந்த
ஏழைக்காகவே வாழ்ந்திருந்தது
இதயம்.

05.
எங்களுர் பள்ளம்
பக்கத்தூரின் மண் நிரப்பியது
அங்கே இப்போ பள்ளம்.